சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் ஊடகத்தினருக்காக 'விஸ்வரூபம்' படம் திரையிடப்பட்டது.
பல வேடங்களில் சர்வதேச பயங்கரவாதிகளை வேட்டையாடும் இந்திய உளவு துறை அதிகாரியின் புதிரான வாழ்க்கை, அதிரடி 'ஆபரேஷன்' சாகசத்தை தனக்கே உரிய தொழில் நுட்ப பாணியில் இந்த 'விஸ்வரூபத்தில்' சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன்.
அமெரிக்காவில் கதக் நாட்டியம் சொல்லித்தரும் நளினமான கமலின் இல்லத்தரசி அணு விஞ்ஞானி பூஜா குமார்.
நாயகனுக்கு பல பெண்டிர் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகப்பட்டு கமலை துப்பறிகிறார். அந்த துப்பறியும் நிபுணர், தீவிரவாதிகளிடம் சிக்கி பலியாகிறார். கமல்- பூஜா இருவரையும் கடத்தி தீவிரவாதி கும்பல் சித்திரவதை செய்கிறது. தான் இறப்பதற்கு முன் இறைவனை பிரார்த்திக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.
அதற்கு பின், ஹை வோல்டேஜ்' ஆக்சனின் தீவிரவாதிகளை கமல் துவம்சம் பண்ணுகிறார். ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளோடு ஊடுருவி ரகசிய திட்டங்களை தெரிந்து கொள்கிறார்.
அமெரிக்காவில் எப்.பி.ஐ.யின் துணையோடு ஆபரேசனில் இறங்கும் இந்திய உளவு துறை அதிகாரி கமல் எப்படி விஸ்வரூபம் எடுத்து அமெரிக்காவை காப்பாற்றுகிறார் என்பதை ஹாலிவுட் பாணியில் படமாக்கியிருக்கிறார்கள்.
சாகச நாயகன் கமலுக்கு உதவியாக அழகிய ஆண்ட்ரியா வருகிறார். இந்திய உயரதிகாரியாக சேகர் கபூர் நடித்துள்ளார். தீவிரவாதி வில்லனாக ராகுல் போஸ் மிரட்டியிருக்கிறார்.
படைப்பாளி கமல்ஹாசனுக்கு பக்கபலமாக இருந்த ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ், இசையமைப்பாளர் ஷங்கர் எஹ்சான் லாய் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் பணி பாராட்டுக்குரியது.
உலகநாயகன் அவருக்கே உரிய மொழியில் படத்தின் வசனங்களை எழுதியிருக்கிறார். நாத்திக சாட்டை எடுத்து நையாண்டி விளையாட்டையும் செய்திருக்கிறார்.
சர்வதேச தீவிரவாதிகளுக்கு எதிரான ஹாலிவுட் பாணி படங்கள் வரிசைக்கு தமிழ் சினிமாவின் விஸ்வரூபத்தை எடுத்து சென்றதால் உலக சினிமா கலைஞராக கமல்ஹாசன் மிளிர்கிறார். |